சிலர் தங்கள் தமிழ் பற்றை காட்ட ஒரு படி மேல போய் ஜோன் ஸ்நோ தேச துரோகி என பட்டதை கொடுக்க முன் வரலாம். கடந்த காலங்களில் உண்மைகளை பேசியவர்கள் எதிர்காலத்தை பற்றிய அக்கறை கொண்டு நிகழ்கால தவறுகளை சுட்டிக்காட்டியவர்கள் அனைவருக்கும் தமிழ் அமைப்புக்கள் கொடுத்த பட்டங்கள் இவைதான் ..
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை துல்லியமாக பார்ப்பவர் மனதினை உருக்கும் வகையில் சனல் 4 வின் காணொளி அமைந்துள்ளது .இதே போன்று ஈராக் யுத்த காணொளி ,ஆப்கானிஸ்தான் யுத்த காணொளி ,வியட்நாம் யுத்த காணொளிகளும் இப்படித்தான் இருந்திருக்கும்.ஆனால் ஒருவரும் வெளியிட போவதில்லை. அப்படி யாரவது சொந்த செலவில் வெளியிட்டாலும் ஒருவரும் பார்க்க போவதுமில்லை.இந்த விடயத்தில்தான் மணி கட்டிய ஆடு, டை கட்டிய ஜோன் ஸ்நோ தேவை .
தமிழர்கள் இந்த கொலை வெளிகள் சம்மந்தமான விமர்சனங்களை வைக்க முன்னர் சுய விமர்சனம் செய்ய பழக வேண்டும். உண்மைகளை ஒளிக்காமல் தாங்கள் விட்ட தவறுகளில் இருந்து பாடங்களை கற்று கொள்ள பழக வேண்டும் .
விடுதலை புலிகள் தலைமை பீடம் ஏன் முதலே சரணடைந்திருந்தால் இவ்வளவு அழிவுகளில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றி இருக்கலாமே என்ற யதார்த்தமும் அதை விட அமெரிக்கா எம்மை (தலைமை பீடத்தை )எப்படியும் காப்பாற்றி விடும் என்ற விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்தின் அதீத அமெரிக்க விசுவாசமும் அதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் மக்களின் உயிரையும் பணயம் வைக்கவும் பலி கொடுக்கவும் விடுதலைப்புலிகள் தயாராக இருந்தனர் என்கின்ற உண்மையும் புலப்படும். இலங்கை அரசாங்கத்தை போர் குற்றம் புரிந்தது என கூறும் சனல் 4 இந்த யதார்த்ததை லாவகமாக மறைத்து விட்டது.
இன்று அதே அமெரிக்காதான் ஐநா பேரரனையை கொண்டு வருகிறது. யார் குற்றியும் அரிசி வந்தால் சரிதானே என்று கூறுவது அமெரிக்காவுக்கு சரி வருமா ….யோசிக்க வேண்டும். தமிழனுக்கு மட்டும்தான் உயிர் உறவுகள் இல்லை ஆப்கானிஸ்தானில் ஈராக்கில் வாழும் இஸ்லாமியனுக்கும் உயிர் உண்டு …அன்று கொரியாவில் வியட்நாமில் ஜப்பானில் வாழந்து அநீதியான யுத்தத்தால் உயிர் இழந்தவர்களும் மனிதர்கள்தான் .யுத்தத்தில் இறந்த அமெரிக்க வீரகளும் ஏழை அமெரிக்கர்கள்தான் ….இவற்றை எல்லாம் இயக்குபவர்கள் ஒரு முதலாளித்துவ அமைப்பின் உயரத்தில் இருப்பவர்கள் ….சமீபத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அப்பாவி குழந்தைகள் உட்பட பெண்களை சுட்டு கொன்று தீ மூட்டி எரித்த அமெரிக்க ராணுவ வீரன் ……வீடு வீடாக கதவு தட்டி அப்பாவி குடும்பங்களை எழுப்பி சுட்டு கொன்ற பாதகன் எங்கே ….ஆப்கானிஸ்தான் தலைவர் கூட கேட்டாரே அவரை ஆப்கான் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என முடிந்ததா …..இல்லையே அந்த கொலைகார சிப்பாய் இன்று குவைத்தில் இருக்கிறார் ….நாளை அமெரிக்காவில் டால்க் ஷோ வில் கலந்து கொண்டு தன் ஆப்கான் அனுபவங்களை பேசி புளங்காகிதம் அடைவார் …சில .வேளைகளில் அவர் புத்தகம் கூட எழுதி கோடிக்கணக்கான டாலர்களை சம்பாதிக்கலாம் …. பின்பு அவர் முதலாளித்துவ அமைப்பின் உயரத்துக்கு ஏறி விடுவார் . குறுக்கு வழி? இறந்த அப்பாவி ஆப்கான் குழந்தைகளுக்கு நீதி கிடைக்குமா இல்லாவிட்டால் BLOOD MONEY தானா …இல்லையேல் அதுவும் இல்லையா இந்த அமெரிக்காதான் தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத்தருமா என கேள்வி எழுப்ப வேண்டும்.
அப்படியான கண்ணியமானவர்களும் இலங்கை ராணுவத்தில் இருக்கிறார்கள் . இலங்கை ராணுவத்தில் உள்ள குறிப்பிட்ட சிலர் தண்டனை பெற வேண்டியவர்கள்தான் சந்தேகமே இல்லை.ஆனால் முழு ராணுவமே இன வெறியர்கள் என காட்டுவது போல அந்த காணொளி அமைக்க பட்டிருந்ததுதான் நேர்மையான தமிழர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை அரச இயந்திரத்தின் யுத்தத்தின் பின்னான நடவடிக்கைகள் சனல் 4 காணொளிக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்து விட்டது குறிப்பாக இலங்கை ராணுவத்திடம் கனரக ஆயுதம் எதுவும் இறுதி யுத்தம் நடை பெரும் பகுதிகளில் இல்லை எனவும் மிக சிறிய ஆயுதங்களை வைத்தே எமது தாக்குதல்களை நடத்துகிறோம் என்று ராணுவ பேச்சாளர்கள் கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் ஊடகங்களுக்கும் அடிக்கடி கூறி வந்ததை தவிடு பொடியாக்கும் வகையில் இலங்கை ராணுவத்தின் யுத்த வெற்றிக்கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.கனரக ரொக்கட்டுகள் ஆகாயத்தை நோக்கி ஏவி தங்கள் குதூகலத்தை இலங்கை ராணுவம் வெளிப்படுத்தியதை இலங்கை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய பொழுது எங்கே உங்கள் ராணுவ ஆலோசகர்கள் எங்கே உங்கள் பேச்சாளர்கள் எங்கே உங்கள் ராஜதந்திரிகள். இல்லாவிட்டால் இலங்கை அரசை உடைக்க உள்ளுக்குள் நுழைந்த மேலாதிக்கத்தின் பணம் வேண்டிய ஒற்றர்கள் அரசை தவறான வழியில் வேண்டுமென்றே இட்டு சென்றார்களா …
பொல்லு குடுத்து அடி வாங்குவது என்பது இதுதான் . இன்று காணொளி பார்த்வர்களுக்கு அந்த கேள்வி எழுகின்றது.
இலங்கை செலவில் பாலர் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் வரை படித்து டாக்டர் பட்டம் எடுத்தவுடன் வெளிநாடு வேலை வாய்ப்பு பெற்று செல்லும் டாக்டர்கள் ஒருபுறம்.
ஈழ மண்ணில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகம் முடித்து பட்டம் பெற்றவுடன் கொழும்பு ட்ரான்ஸ்பர் கேட்டு க்யூவில் நிற்கும் டாக்டர்கள் மறுபுறம்
முல்லைத்தீவு மண்ணில் நரபலியாட்டதின் மத்தியில் சேவை ஆற்றிய டாக்டர்கள், தாதிகள்,தொண்டர்கள் அனைவருமே அரசால் கௌரவிக்க பட வேண்டியவர்கள் .நாம் இன்று சொல்லவில்லை 2009 மே மாதம் கூறினோம். .மகிந்தாவிடம் நல்ல பிள்ளை பேர் வேண்ட வேண்டும் என நினைத்த சிலரால் சும்மா இருக்கும் டாக்டர்களை கைது செய்ததும் பின்னர் ஊடகம் முன் நிறுத்தியதால் என்ன லாபம் எந்த உலகத்திடம் நல்ல பெயர் வேண்ட வேண்டும் என நினைத்து செய்த காரியம் இன்று அதே உலகத்தால் பரிகாசம் செய்யபடுகிறதே…
புலிகளின் கட்டுபாட்டு பிரதேசத்தில் இலங்கை அமைச்சர் விமல் வீரவம்ச டாக்டர் தொழில் புரிந்திருந்தாலும் புலிகள் சொல்வதைத்தான் செய்திருப்பார் .ஜேவிபி சம்பிகா வும் விதி விலக்கல்ல. ஒரு மனிதனின் அடிப்படை எண்ணம் தன் உயிரைக் காப்பாற்றி கொள்வது தான் தன் உயிரை காப்பாற்ற வேறு என்னதான் அந்த டாக்டரால் செய்திருக்க முடியும் …….
இந்த யதார்த்ததை ஏன் அரசு புரிய மறுத்தது அல்லது அரசாங்கதினுள் நுழைந்து இருக்கும் விஷ கிருமிகளால் மறைக்கபட்டதா …அல்லது தாங்கள் அரச ஆதரவாளர்கள் என கூறிக்கொண்டு வெளிநாடுகளில் அடாவடித்தனம் செய்யும் சிலரால் நியாயமாக்க பட்டதா….
வெளிநாடுகளில் புதிதாக இப்பொழுது முளைத்திருக்கும் அரச பற்றாளர்களின் அரச ஆதரவு கட்சிகளின் ஐரோப்பிய ஆலோசகர்கள் நிலைமை ஆழமாக கவனிக்க வேண்டிய விடயம். இவர்கள் இன்று மகிந்தா தா தா தகிடுதித்தனம் போடுகிறார்கள் .
“இன்றைக்கு மகிந்தா நாளைக்கு அவர் கோவிந்தா “அவர்களை பொறுத்த வரை சுதந்திர கட்சி என்றால் என்ன அதன் தார்ப்பரியம் என்ன வரலாறு என்ன ஒன்றும் தெரியாது இலங்கை ராணுவ எஜண்டுக்களால் கொடுக்கப்படும் சில ஈரோக்களுக்காக வாலை ஆட்டி விட்டு வேண்டிய காசுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என இலங்கை அரசியலை விமர்சிக்கும் சிலரை தாக்குவார்கள் மிரட்டுவார்கள்.ஆனால் அவர்களால் ஐரோப்பாவில் இயங்கும் பெரிய பணக்கார தமிழ் ஊடகங்கள் ,விமர்சகர்கள் பற்றி மூச்சும் காட்ட முடியாது . ஒரு காலத்தில் அவர்கள் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்தானே என்ற அதீத அறிவு அவர்களுக்கு.
வேடிக்கையான விடயம் என்னவென்றால் இன்றைய நாயகன் மகிந்தா நாளை ஆட்சியில் இல்லாவிட்டால் மகிந்தாவா அப்படி ஒருவர் இருந்தாரா எனக்கு தெரியாதே எனக்கு தெரிந்ததெல்லாம் “ராமனுக்கு அணில் தமிழனுக்கு ரணில்” என்பார்கள். சரத் பொன்சேக்கா சிங்களவர் இல்லை அவர் தமிழர்தான் அவர் பெயர் சரத் பொன்னையா என வரைவிலக்கணமும் வரைவார்கள்.
யாழ்ப்பாணத்தில் கசினோ கட்டுவோம் ஹோட்டல் கட்டுவோம் வேண்டுமென்றால் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் பெண்ணா சிங்கள பெண்ணா முஸ்லிம் பெண்ணா வகை வகையாக ஒவ்வொரு வயசில் சப்ளையும் செய்வோம் அப்ப இன்னும் அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் தாய்லாந்து லாஸ்வேகாஸ் இப்படித்தான் நடக்கிறது என உதாரணம் கூறி தனது பொருளாதார நிபுணத்துக்கு வலு சேர்கிறாராம் ஒரு நிபுணர் ? .இப்படியான கருத்துக்கள் சொல்பவர்தான் அரச இணக்க தமிழ் அரசியல் கட்சியின் ஆஸ்தான ஆலோசகராம். அந்த கருத்தின் குரூர தன்மையை வாசிப்பவர்கள் புரிய வேண்டும். விபசாரம் செய்பவள் மட்டும் ரத்தக்கண்ணீர் வடிப்பதில்லை அவள் குடும்பம் வாடும் அவளும் ஒரு பெண் இந்த கருத்துக்களை சொல்பவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை ஒரு தாயின் வயிற்றில் இருந்துதான் வருகிறார்கள் எம்மை சுற்றி தாய் சகோதரி மனைவி மகள் காதலி ஸ்தானத்தில் பெண்கள் இருக்கிறார்கள் உங்களால் எப்படி முடிகிறது.நீங்கள் எல்லாம் அரச ஆதரவு கட்சி பிரதான ஆலோசகர்களாம்.அதனை தவறு என்று சொன்னால் சொல்பவர்கள் தேச துரோகிகள் என பட்டம் வேறு இலங்கைக்கு போக மாட்டீர்கள் என்ற பயமுறுத்தலுடன் .
இப்படியான நிலைமையில் அரசாங்கத்துக்கு எப்படியான ஆலோசனைகள் வழங்க பட்டிருக்கும் என ஊகிக்கலாம்.இந்த ஆலோசகர்களால்? நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் தங்கள் சார்ந்த கட்சி மற்றும் எம்பசி ஏஜண்டுக்கள் மூலமாக முடியும்
”"டாக்குத்தர்மாரை பிடிச்சு கைது செய்து இரண்டு அறை விட்டு வெருட்டி சொல்லிகொடுத்ததை சொல்ல விடுங்கள் இங்க வெளிநாட்டில எல்லாம் அப்படித்தான் செய்கிறவர்கள் மாத்தையா , அதனை ஊடகங்களுக்கு பெரிய பிராச்சார பேட்டியாக விடுங்கள் எல்லாம் வெற்றிதான் “ என உஷார் கொடுக்க பட்டு ஏஜன்ட் மூலமாக தகவல் போய் இருக்கலாம் . ஏன் என்றால் இலங்கைக்கு யார் யார் போகிறார்கள் அரச விமர்சகர் ஒருவர் இலங்கைக்கு வருகிறார் என தகவல் சொல்பவர்களால் இதனை சொல்பது ஒன்றும் பெரிய விடயமல்ல . ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளி விஷம்.
இன்று டாக்டர்கள் பயமுறுத்த பட்டார்கள் அவர்கள் கௌரவிக்க படவில்லை என சனல் 4 ஊடகம் சொல்கிறது. இதே கேள்வியை சனல் 4 ஊடகம் கேட்கிறது மீட்கப்பட்ட பயணகைதிகளை நடத்தும் முறையா இது . புலன் கடந்த அரச ஆதரவு ஆலோசகர்கள்?ளும் இலங்கையின் யுத்தத்தின் பின் அரசின் பிழையான நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.


